Friday, December 21, 2012

உலக அழிவு குறித்து...

உலக அழிவு குறித்து கடந்த திங்கள் கிழமை வெளிவந்த குங்குமத்தில் நான் எழுதிய கட்டுரையின் இறுதிப் பகுதி - மனுஷ்ய புத்திரன் (from facebook)

எனக்கென்னவோ இது ஊடகங்களின் ஒருங்கிணைந்த திட்டமிட்ட வியபாரம் என்று தோன்றுகிறது. கொஞ்ச நாளைக்கு முன்பு நாஸ்டர்டாமின் ஜோசியங்களை வைத்துக்கொண்டு ஜல்லியடித்தார்கள். ஜனவரி 21 ஆந்தேதி வரை இந்த பரபரப்பு விவகாரம் உச்சதிற்குப் போய் பிறகு காணாமல் போய்விடும்.

மகத்தான இந்த பிரபஞ்சத்தில் பூமி என்ற சிறிய துணுக்கு ஏதோ ஒரு தற்செயலான காரணத்தால் எந்த நேரமும் அழிந்து போகலாம். அப்படி ஒரு சந்தர்ப்பம் நம் வாழ்நாளில் வந்தால் அதை நாம் கொண்டாடத்தான் வேண்டும்.  ஏனென்றால் எவ்வளவோ காலத்திற்குப் பிறகு பூமியின் வரலாற்றில் மனிதனின் வரலாற்றில் அப்படி ஒன்றைப் பார்க்கும் அனுபவம் நமக்குக் கிடைத்தால் அது எவ்வளவு பெரிய கொடுப்பினை? மேலும் யாருடைய மரணத்தின் துக்கமும் பிரிவும் நம்மை அண்டாத முழுமையான பரிசுத்தமான அழிவு அது. பூமியில் எல்லா குரோதங்களும் வன்முறையும் துக்கமும் அன்றோடு முடிவுக்கு வந்துவிடும். உலகத்தின் முடிவு என்பது மனித குலத்தின் மகத்தான விடுதலையாக இருக்கும்.

ஆனால் கடவுள் அவ்வளவு கருணை உள்ளவர் அல்ல. நம்மை அவ்வளவு ஈஸியாக விட்டுவிட மாட்டார். கவலைப்படாதீர்கள். 22 ஆந்தேதி காலை அர்விந்த கெஜ்ரிவால் இன்னொரு  பெரிய ஊழலை வெளிப்படுத்துவார். சில இளைஞர்கள் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொள்வார்கள். பையன்கள்  ஃபுட்போர்டில் தொங்கிக்கொண்டு போய்க்கொண்டிருப்பார்கள். ஷேர் மார்க்கெட்டில் குறியீட்டெண்கள் சில புள்ளிகள் உயரவோ தாழவோ கூடும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக உலகமே உற்சாகத்துடன் தயாராகிவிடும். நான் குங்குமதிற்கு என்னுடைய அடுத்த கட்டுரையை எழுதிக்கொண்டிருப்பேன்.

மேலும் உலகம் அழிவது என்பது நமக்கு புதிதல்லவே. ஒவ்வொரு மனிதனும் இறக்கும்போதும் இந்த உலகமொரு முறை அழியத்தானே செய்கிறது.

No comments:

Post a Comment